நெய்வேலி என்எல்சியை கண்டித்து பாமக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலைவாய்ப்பில் தமிழர்களையும் தமிழக மக்களையும் தொடர்ந்து புறக்கணிக்கும் நெய்வேலி என்எல்சியை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. இக்கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் பெரிய அளவிலான பூட்டு ஒன்று செய்யப்பட்டு வைக்கப்பட்டது. அந்த பூட்டை மக்களுக்கு காண்பித்த அன்புமணி ராமதாஸ் ''இந்த பூட்டு ஒரு அடையாள பூட்டு. எங்கள் மண்ணையும், எங்களது மக்களையும் நிம்மதியாக விடுங்க. ஒரு பிடி மண்ணை கூட நாங்கள் எடுக்க விட மாட்டோம். அதையும் மீறி ஏதாவது செய்தீர்கள் என்றால் இதுபோன்ற அடையாள பூட்டு கிடையாது உண்மையான பூட்டை எடுத்துக் கொண்டு சுற்றி இருக்கிற எல்லா கேட்டையும் பூட்டி விடுவோம். யாரும் வெளியே போக முடியாது உள்ளே வரவும் முடியாது'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் காட்டப்பட்ட அந்த பெரிய அளவிலான பூட்டு மாதிரி என்பது அனைவரையும் கவர்ந்திருந்தது. அந்த பூட்டினை செய்தவர் சிற்பி சிவா. இவர் ஏற்கனவே பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்தவர் என்பதும், காடுவெட்டி குருவின் சிலை அவரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருவதாக பாமக நிறுவனர் ராமதாஸிடம் பாராட்டு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.