தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் துரிதகதியில் செய்து வருகிறது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகள் இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையம் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை வெளியிடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி இருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று மருத்துவர் நக்கீரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இதுதொடர்பாக நீதிமன்றம் விசாரணை செய்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் ஏன் உச்சநீதிமன்றம் செல்லக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.