நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் தாராபுரம் தொகுயில் போட்டியிட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல். முருகன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, பாஜக தலைமை அவரை மத்திய அமைச்சராக்கியது. இதனால் அடுத்த ஆறு மாதத்தில் தேர்தலில் நின்றோ அல்லது மாநிலங்களவை மூலமாகவோ அவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருந்தாலும் அதில் வெற்றிபெறும் அளவுக்குப் பாஜகவுக்குப் பேரவையில் பலம் இல்லை. அதிமுக உதவி கிடைத்தாலும், வெற்றி என்பது பாஜகவுக்கு கிடைக்காது. இந்நிலையில் எல்லா சூழ்நிலைகளையும் உணர்ந்த பாஜக தலைமை, தற்போது அவரை மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு அங்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கிருந்து எல். முருகன் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.