தமிழகத்தில் கரோனா நோய் தொற்று அதிகரித்ததால் தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தியது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 8 மணி முதல் 12 மணிவரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள் திறந்திருக்க அனுமதி அளித்தது. அதேபோல் அரசு மதுபான கடைகளும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால் ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்காமல் தொடர்ந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியதால் தமிழக அரசு ஊரடங்கை மேலும் வலுப்படுத்தியது. இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம் மட்டும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறக்கப்படும் என்றும், அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்படும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்பட்டதால், மதுகுடிப்பவர்கள் நிலை தற்போது கேள்விகுறியாகி உள்ளது. இதனால் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு மதுபான பாட்டில்களை வீடுகளிலும், சிறிய அளவிலான ஓட்டல்களிலும், வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனா்.
அதிலும் ஒரு குவாட்டர் விலை 125க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெளியே கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு குவாட்டர் விலை நகர பகுதியில் 350 ரூபாய் வரை விற்கபடுகிறது. அதிலும் நகர பகுதியில் ராமகிருஷ்ணா பாலம், கரூர் பைபாஸ் பாலம், உறையூா், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
அதேபோல் புறநகா் பகுதியில் சமயபுரம், மேலவாளாடி, மண்ணச்சநல்லூர், பஞ்சப்பூர், உள்ளிட்ட புறநகா் பகுதிகளில் ஒரு குவாட்டர் விலை 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை செய்பவர்களும் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினரை சரி கட்டிவிட்டு, கல்லாக்கட்ட ஆரம்பித்துள்ளனர்.