Skip to main content

'என் வாழ்நாள் நன்றியை சமர்ப்பிக்கிறேன்'-செந்தில் பாலாஜி பேட்டி

Published on 26/09/2024 | Edited on 26/09/2024
 'Lifelong gratitude to the Chief Minister of Tamil Nadu'-Senthil Balaji interview

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாவது, 'வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது; எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்; 25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமீன் குறித்த ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் புழல் சிறைத்துறைக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்த நிலையில் தற்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். 471 நாட்களுக்கு பின் வெளியே வந்த அவரை  அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  வரவேற்று ஆரவாரம் செய்தனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் .பாரதி அவரை மாலை அணிவித்து வரவேற்றார்.

திமுகவின் கருப்பு சிவப்பு துண்டை கழுத்தில் அணிந்தபடி வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''என் மீது அன்பும் நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த கழகத்தினுடைய தலைவர், தமிழக முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தினுடைய இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கும் இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்காகும். இந்த பொய் வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இந்த வழக்கில் இருந்து மீண்டு வருவேன். தமிழக முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியை பணிவன்போடு சமர்ப்பிக்கின்றேன்'' என்றார்.

அந்த பகுதியில் திமுக தொண்டர்கள் வானவேடிக்கை நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகப்படியானோர் குவிந்ததால் மாதவரம்-ஆந்திரா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல திமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே சிறிது தள்ளு முள்ளும் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்