அரியலூர் மாவட்டம் காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயாறு(90). இவரது பேரன் அசோக்குமார்(36). சொத்து பிரித்துக் கொடுப்பது சம்பந்தமாக ஐயாறுக்கும் அசோக்குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி அசோக்குமார், ஐயாறுவிடம் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த அசோக்குமார், தனது தாத்தா ஐயாறுவை மரக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஐயாறு உயிரிழந்தார். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டு நேற்று நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில் சொத்துக்காகத் தாத்தாவைக் கொலை செய்த பேரன் அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தண்டனை பெற்ற அசோக்குமாரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்தியச் சிறைக்குக் கொண்டு சென்று அடைத்துள்ளனர்.