கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகில் உள்ளது ஊத்தங்கால். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவரது மகன் 27 வயது அருண்பாண்டியன், கடந்த 2016ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ்-டூ படித்து வந்த 17 வயது மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளார்.
அதோடு தான் வெளி நாட்டிற்கு செல்லப் போவதாகவும் அதற்கு திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி அந்த ஊர் மாரியம்மன் கோவிலில் தன் குடும்பத்தினர் முன்னிலையில் மாணவியை திருமணம் செய்து கொண்டார். பிறகு வெளிநாடு சென்று ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஊர் திரும்பிய அருண்பாண்டியன் வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார்.
இதுகுறித்து பிளஸ்-டூ மாணவி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி எழிலரசி, இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று அளித்துள்ளார். அத்ததீர்ப்பில் அருண்பாண்டியன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் அருண்பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.