கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது மலைமேடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துரை(48). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுசீலா என்பவருக்கும் 2010ல் திருமணம் நடந்துள்ளது. துரை மனைவி சுசீலா மீது சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு மே மாதம் சுசீலாவை அவரது கணவர் கொலை செய்துள்ளார். இதுகுறித்து சுசீலாவின் தாய் கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரையை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பளித்தார். அதில் மனைவியை கொலை செய்த துரைக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ராதிகா செந்தில் குமார் ஆஜராகி வாதாடி உள்ளார். குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பாக வாதாடி உள்ளார். இதனையடுத்து விழுப்புரம் அருகிலுள்ள பெண்ணைவளம் கிராமத்தைச் சேர்ந்த கூத்தான்(39) மனைவி பார்வதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்(28) நெருக்கமான பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பார்வதியின் கணவர் கூத்தான், சிவகுமாரின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்த போது கூத்தான் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கூத்தானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச் செல்வன் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் விழுப்புரம் அருகே உள்ள குச்சி பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் புறம்போக்கு நிலம் பயிர் செய்வது சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அய்யனார் தனது வீட்டுக்கு பக்கத்தில் செப்டிக் டேங்க் கட்டி வந்த நிலையில் அந்த செப்டிக் டேங்க் இடிக்க வேண்டுமென்று வெங்கடாச்சலம் அய்யனாரை மிரட்டியுள்ளார். இந்த விரோதம் காரணமாக 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அய்யனார் தனது குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு செல்லும்போது வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பினர் வழிமறித்து அய்யனாரை தாக்கியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அய்யனார் இறந்து போய்விட்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் குற்றவாளிகள் வெங்கடாசலம், சௌந்தர்ராஜன், குமார், செல்வம், குமரவேல் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இப்படி நேற்று ஒரே நாளில் விழுப்புரத்தில் 3 வழக்குகளில் 8 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.