Skip to main content

''அம்மா மருத்துவச் செலவுக்கு திருடுறோம்'' - கொள்ளையடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட இருவர் கைது

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

nn

 

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்கள் இருவர் தன் அம்மாவின் மருத்துவச் செலவுக்காக திருடிவிட்டதாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணாதேவி. சொர்ணாதேவியின் கணவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ள நிலையில், அவர்களது குடியிருப்பில் உள்ள பத்து வீடுகளில் ஒன்று காலியாக இருந்துள்ளது. அதனை வாடகைக்கு விட 'டூலெட்'  பலகையை கட்டியுள்ளார் சொர்ணாதேவி. இதனைப் பார்த்து இரண்டு இளைஞர்கள் கடந்த 31ஆம் தேதி காலை 10 மணி அளவில் வாடகைக்கு வீடு கேட்டு வந்தனர்.

 

வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகை குறித்து பேசிக் கொண்டிருந்தபொழுது கத்தியை எடுத்துக் காட்டிய அந்த இளைஞர்கள் இருவரும் மூதாட்டியை மிரட்டி அவர் கழுத்தில் இருந்த தங்கச் செயின், வளையல், மோதிரம் என எட்டு சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். செல்லும் பொழுது மூதாட்டியின் காலில் விழுந்து அவசர பணத்தேவைக்காக கொள்ளை அடிப்பதாகவும், மன்னிக்கும்படியும் கேட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கோவையைச் சேர்ந்த அஜித் மற்றும் பிரபு என்ற இருவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

 

அஜித்தின் தாயார் டிபி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவச் செலவுக்காக நகை கொள்ளையில் ஈடுபட்டதாக அஜித் தெரிவித்தார். அதேபோல் பிரபு என்ற நபர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். இருவரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 8 சவரன் நகையானது மீட்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்