இந்தியா முழுவதுமே பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்துவருகிறது. தனியார்துறையின் டெலிகாம் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை ஈட்டிவரும் நிலையில் இந்தியாவின் பெரும் நிறுவனமான பி.எஸ்.என்.எல் மட்டும் நட்டத்தையே சந்தித்து வருகிறது.
இதற்கு காரணம் அரசாங்கத்தின் கொள்கை முடிவுதான் என்கிறார்கள் அதன் தொழிலாளர்கள். காப்ரேட் நிறுவனங்களுக்கு உரிமங்களை வாரி வழங்கும் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசாங்கம், அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்க்கு உரிமங்களை வழங்குவதில்லை என போராட்டம் செய்தனர். பொதுத்துறை நிறுவனமாக பி.எஸ்.என்.எல்லை மூடவைக்க அரசாங்கம் கார்ப்ரேட்களுக்கு துணை போகிறது என்கிறார்கள் அதன் ஊழியர்கள்.
இந்நிலையில் செப்டம்பர் 3ந்தேதி காலை, வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே அந்த நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் அரசாங்கத்தை கண்டித்து போராட்டம் செய்தனர். தங்களுக்கு வழங்க வேண்டிய ஒரு மாத ஊதியத்தை வழங்காததை கண்டித்தும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு மாதமாக ஊதியம் தராத நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் நிரந்தர தொழிலாளர்களோடு சேர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.