தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனால் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
மருத்துவமனைகளில் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஜூன் மாதம் 47 பேருக்கும், ஜூலை 51 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் ஆகஸ்டில் 53 பேருக்கும், செப்டம்பர் மாதம் இந்த 20 நாட்களில் மட்டும் 121 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுள்ளது.
ஒருபுறம் இன்ப்ளூயென்சா காய்ச்சலை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 1,784 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 121 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கையானது இரு மடங்கு அதிகம் என்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வரக்கூடிய நோயாளிகளுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். அதனால் தான் அந்தந்த அரசு மருத்துவமனைகளே தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்ள தடையில்லா சான்று தந்தோம்.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பது உள்ளாட்சித் துறையின் பணி. இருந்தாலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உத்தரவுகள் பிறப்பித்துள்ளோம். மேலும் துறைகள் இணைந்து நடக்கிறதா என்பதையும் தொடர்ச்சியாய் கண்காணிக்கத்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரி முதல்வர்களுடனான கூட்டம் காலை ஏழு மணியில் இருந்து நடைபெற்றது.
மாவட்ட வாரியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கொசு உற்பத்தியாகும் சூழலை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அன்னூரில் ஒரு மருத்துவமனையில் நான் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு மழையால் தண்ணீர் தேங்கி இருந்தது. உடனே நீர் வெளியேற்றப்பட்டு விட்டது. எங்கெல்லாம் இந்த மாதிரி சொல்லப்பட்டதோ அங்கெல்லாம் மாவட்ட ஆட்சி நிர்வாகம் செய்து கொண்டு உள்ளது” எனக் கூறினார்.