
சக மனிதனுக்கு உதவுவோம்; வறுமையை விரட்டுவோம்! என தனது பிறந்த நாளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் குவைத் ராஜா கூறினார்.
தனது பிறந்த நாளான ஏப்ரல் 24ல் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறார். ராஜபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குவைத் ராஜா. ராஜபாளையத்திலுள்ள குவைத் ராஜா வீட்டில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக இன்று (24ஆம் தேதி) ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பெல்லாம் பலமாக இருந்தது. லட்டு, பிரியாணி, சேலை என வந்திருந்த மக்களுக்கு வழங்கினார் குவைத் ராஜா.
குவைத் ராஜா மக்கள் சமூக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விழா ஏற்பாடுகளைக் கவனித்திருந்த நிலையில், நம்மிடம் பேசிய குவைத் ராஜா “நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் பலரும் பின்தங்கியிருக்கிறார்கள். பலருடைய தேவைகளையும் எந்தவொரு தனிமனிதனாலும் நிறைவேற்றிவிட முடியாது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் அரசாங்கம் நல்ல முறையில் செயல்படுகிறது. நமது நாட்டில் செல்வந்தர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஏழைகள் மீது இரக்கம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள் மட்டுமல்ல, ஏழைகளோ நடுத்தர மக்களோ ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டுவதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதும் நடந்தால் வறுமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். சக மனிதனுக்கு உதவுவோம்; வறுமையை விரட்டுவோம்” என்றார்.