சென்னை போலீஸ்காரரின் வரம்பு மீறிய பேச்சால், கால்டாக்சி ஓட்டுனர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கால் டாக்சி ஓட்டுனராகப் பணியாற்றிய இவர், கடந்த 25-ஆம் தேதி சென்னை பாடியில் இருந்து கோயம்பேடு வரும் வழியில், டிஎல்எப் என்ற இடத்தில், பெண் வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக் கொண்டு, மற்றொரு வாடிக்கையாளருக்காக சாலையோரம் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், வண்டியை நிறுத்தக் கூடாது என்று திட்டியுள்ளார். இதனால் சற்று தள்ளி சென்று வண்டியை நிறுத்தி உள்ளார்.
அங்கும் வந்த அந்தப் போலீஸ்காரர், வண்டிக்கு உள்ளே பெண் அமர்ந்திருக்கிறார் என்றும் பார்க்காமல் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். மேலும் ஓட்டுனர் ராஜேஷின் அம்மாவையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ், அன்றைய தினம் (25-01-2019) இரவு சென்னையை அடுத்த மறைமலை நகரில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு முன்னர் ராஜேஷ், "தனது மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பேசிய வீடியோவை செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார். அந்த வீடியோவை இப்போது குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில், மேற்கண்ட சம்பவங்களை விவரமாகச் சொல்லியதுடன், காவல் துறையினர் இப்படி நடந்துகொள்ளலாமா? என்றும் ஆதங்கத்துடன் கேட்டுள்ளார். மேலும், ஒரு மனிதனை இந்த அளவுக்கா கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது? என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டும் சென்னை தரமணியில் இதேபோல், மணிகண்டன் என்ற ஓட்டுனர் காவல் துறையின் அடாவடியால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்தப் போலீஸ்காரரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தீர்கள். இதுதான் நீங்கள் கொடுக்கும் தண்டனையா? என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனையும், காவல்துறைக்கு பொறுப்பான எடப்பாடி பழனிசாமியையும் கேள்வி கேட்டுள்ளார். நானும் தற்கொலை செய்யப்போகிறேன். ஓட்டுனர்களை காவல்துறையினர் கண்ணியக்குறைவாக நடத்துவது, இதுவே கடைசியாக இருக்கட்டும்" என்றும் வீடியோவில் பேசி இருக்கிறார் ராஜேஷ்.
மனக்குமுறலுடன் இவ்வாறு பேசிய ராஜேஷ், சொன்னது மாதிரியே மரணத்தை தழுவி விட்டார். ஆனால், அவரை நம்பி இருந்த குடும்பம் இன்று நடுத்தெருவில் நிற்கிறது. இனியாவது மனிதனை மனிதனாக மதியுங்கள் காவலர்களே! மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமானாக, இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள் என்பதை இனியாவது உணருங்கள்!