Skip to main content

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை; அதிரடியாகச் செயல்பட்ட வனத்துறை

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Leopard that threatened the public The forest department administered the anesthetic

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று (06.01.2024) அங்கன்வாடியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அந்த குழந்தையை அங்குள்ள தேயிலைத் தோட்டத்திற்கு இழுத்துச் சென்று தாக்கியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள், அந்தப் பகுதிக்கு உடனடியாக ஓடி வந்து படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அந்த குழந்தை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

கடந்த 21 ஆம் தேதி சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், தற்போது வடமாநிலத் தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கும்கி யானை உதவியுடன் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அதே சமயம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்கவும் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். அதோடு சிறுத்தையை சுட்டுப் பிடிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அம்ப்ரூஸ் வளைவு என்ற பகுதியில் உள்ள புதர் ஒன்றில் சிறுமியைக் கொன்ற சிறுத்தை பதுங்கி இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் குழுவினர், டிரோன் கேமிரா உதவியுடன் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தையை தாக்கிக் கொன்ற சிறுத்தைக்கு முதல் டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க தயார் நிலையில் உள்ளனர். 

சார்ந்த செய்திகள்