நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியை ஒட்டியுள்ள விஜய நாராயணம், சங்கனாங்குளம் பகுதிகளில் கடந்த 10 தினங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அப்பகுதி விவசாய மக்கள் பீதியில் தங்களின் வயல் வெளிப்பக்கம் போகாமலிருந்தனர்.
தகவலறிந்த வனத்துறையும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்திக் கண்காணித்தனர். ஆனால், வடக்கு விஜயநாராயணத்தின் ஒரு தோட்டப் பகுதியில் இரண்டு பசுக்களைக் கடித்துத் தின்றிருக்கிறது சிறுத்தை. வனத்துறையினர், அங்கு கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை. அடுத்து, அதே வடக்கு விஜய நாராயணத்திலுள்ள புஷ்பராஜன் என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த இளம் பசுங்கன்றைத் தாக்கிவிட்டு, பக்கத்து தோட்டத்திலிருந்த இரு ஆடுகளையும் கடித்துக் கொன்றிருக்கிறது. இப்படி சிறுத்தை அடுத்தடுத்து கால்நடைகளைக் கொன்றொழித்துக் கறியைத் தின்றதால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர்.
இதனிடையே, நேற்றைய தினம் (10/01/2021) வீராணஞ்சேரி கிராமத்தின் பிச்சைப் பழம் என்பவரின் விவசாய தோட்டதில் புகுந்த சிறுத்தை, அங்கு 150 ஆடுகள் கிடை போட்டிருந்ததில் 25க்கும் மேற்பட்ட ஆடுகளின் கழுத்தைக் குறி வைத்துக் கடித்ததுடன், ஆடுகளின் சதைப் பகுதிகளையும் கடித்துப் பிய்த்ததில் அத்தனையும் மாண்டு போயின என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதில், நான்கு ஆடுகள், காயத்துடன் தப்பியுள்ளன. இதன் சேதார மதிப்பு ரூ.2 லட்சத்திற்கும் மேல் என்கிறார்கள் விவசாயிகள்.
சம்பவத்தைப் பார்த்தால், ஒன்று அல்லது இரண்டு சிறுத்தை வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதனால்தான், இத்தனை ஆடுகள் தாக்கப்பட்டுள்ளன என்ற பீதியை வெளிப்படுத்தும் விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்களுக்குப் போனால் தங்களின் மீதும் சிறுத்தை பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையை வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆடுகளைக் தாக்கியவிதம், அதன் கால் தடயம் போன்றவைகளைச் சுட்டிக்காட்டி விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தபோது, ‘கால் நடைகளைக் கடித்தது நாயாகக்கூட இருக்கலாம். தவறான தகவலைக் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவோம்’ என்று வனத்துறையினர் மிரட்டுவதாக விவசாயிகள் தெரிக்கின்றனர்.
வனத்துறையினரின் கூற்றுப்படி நாயாக இருந்தால் மொத்தமாக 25க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடிக்க வாய்ப்பில்லை. அதே போன்று கடித்த முறையும் மாறுபட்டிருக்கிறது, சிறுத்தையின் கடிபோன்றுதான் உள்ளது என்று விவரமாக கூறுகிறார்கள். இதனிடையே கால்நடைத்துறையினர், தாக்குதலுக்குட்பட்ட ஆடுகளின் பாகத்தை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.