ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் அக்கட்சி மற்றும் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், 13ந் தேதி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய துரைமுருகன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
இதேபோல் மேலூர் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையில் சில அவதூறு கருத்துக்களைப் பேசியுள்ளார். தொடர்ந்து சீமான் வன்முறை, பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் பேசி வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொது அமைதியைக் காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.
இதே போல 100 நாள் வேலைத் திட்டம் பற்றியும் அதில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்களை அநாகரிகமாகப் பேசிய சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் முழுக்க சீமானைக் கண்டித்தும் கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.