தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சட்டம்- ஒழுங்கு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ,இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோருடன் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., சட்டம் ஒழுங்கு காவல்துறை ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து, வாக்குச் சேகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.