திண்டுக்கல் மாவட்ட புதிய சூப்பிரண்டாக சீனிவாசன் பொறுப் பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ரவளிபிரியா தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சீனிவாசன் அப்பொறுப்புக்கு புதியதாக நியமிக்கப்பட்டு, முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் சரகத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றத் தொடங்கி, அதன் பிறகு கும்பகோணம், தென்காசி, திருச்சி பொன்மலை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர். அதன் பிறகு அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக மூன்று ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றினார்.
கடந்த மாதம் திருவாரூர் அருகே நடந்த ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில், மிகத் துரிதமாகச் செயல்பட்டு அரை மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்தார். இந்நிலையில், ஏற்கனவே பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் போலீஸ் சூப்பிரண்டாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. சீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும். கரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக அரசு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும். மாவட்டத்தில் போக்குவரத்து சீர் செய்யப்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைவரது பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படும்” என்று கூறினார்.