உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை சேலத்தில் நிறுவப்பட்டு அதற்கு குடமுழுக்கு நிகழ்ந்தது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை வழிபட்டனர்.
உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை 140 அடியில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் இருந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் கோவிலில் முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இதனால் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை என்ற அடையாளத்தை பெற்றுள்ளது முத்துமலை முருகன் கோவில்.
இச்சிலை கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்த நிலையில், இன்று திறந்து வைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த முருகன் சிலையை பக்தர்கள் பார்வையிட லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த அதே ஸ்தபதி இச்சிலையும் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.