தொலைக்காட்சி சீனியர் செய்தியாளர்களை தவறாக சித்தரித்த போலி நிருபர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 22-ம் தேதி குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தின் போது நிருபர் தோரணையில் ஒருவர் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த காங்கிரசார் அவரிடம் எந்த பத்திரிக்கை நிருபர் என்று கேட்டதற்கு யாரும் கேள்விப் படாத ஒரு பத்திரிக்கையின் பெயரை சொன்னார். இதனால் சந்தேகம் அடைந்த காங்கிரசார் அங்கு நின்ற தொலைக்காட்சி சீனியர் செய்தியாளர்கள் பீட்டர் ஜெரால்டு மற்றும் அருள்குமாரிடம் கூறவே , அவர்கள் பிடித்து விசாரித்த போது, நான் தலைமை செயலக பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர் என்றும் எல்லா மாவட்டத்துக்கும் நான் செல்ல உரிமை இருப்பதாக கூறி ஒரு அடையாள அட்டையையும் காட்டியுள்ளார்.
இதுவும் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரை பிடித்து மார்த்தாண்டம் போலிசில் அந்த செய்தியாளர்கள் ஒப்படைத்தனர். அதன் பிறகு போலிஸ் விசாரணையில் மார்த்தாண்டம் காரவிளையை சேர்ந்த ராஜ் என்றும் பல மோசடி வழக்கில் ஈடுபட்டு தலை மறைவாகியிருந்தவர் என்றும், மேலும் அவர் வைத்திருந்த பைக்கின் எண் போலியானவை என்றும் தற்போது மக்கள் தெரிந்திராத பல பத்திரிக்கைகளின் நிருபர் என கூறி 5 அடையாள அட்டைகளும் அவரிடம் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் போலிசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பினார்கள். இந்த நிலையில் அந்த நபர் பீட்டர் ஜெரால்டும் அருள்குமாரும் போலி நிருபர்கள் என்றும் மாவட்ட தலைமை நிருபர்கள் என்று கூறிக் கொண்டு பலரை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் அதே போல் தான் என்னையும் மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறி இருவருடைய புகைப்படத்துடன் யாரும் பார்த்திராத ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டியிருந்தார்.
இதை பார்த்த குமரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இதனால் குமரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத்தை நேற்று சந்தித்து அந்த போலி நிருபர் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த போலி நிருபர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவத்தால் மற்ற போலி நிருபர்களும் கலகத்தில் உள்ளனர்.