குளமங்கலம் கிராமத்தில் சார் ஆட்சியர் ஆய்வு:
டெங்கு பரப்பும் கொசுக்கள் கண்டறியப்பட்டு அழிப்பு
குளமங்கலம் வடக்கு கிராமத்தில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் வீடு மற்றும் பல இடங்களில் புதுக்கோட்டை சார் ஆட்சியர் சரயு திடீர் ஆய்வு செய்தார். அங்கு டெங்கு பரப்பும் கொசுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் பனங்குளம் கிராமத்தில் காயத்திரி (3), காசிம்புதுப்பேட்டை ராதிகா (13) கொத்தமங்கலம் மையம் சித்தார்த்(4), கொத்தமங்கலம் தெற்கு அன்பு (6) ஆகிய சிறுவர், சிறுமிகளும், செரியலூர் இனாம் மாரியாயி (65) என்ற மூதாட்டியும் கடந்த சில நாட்களுக்குள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, பனங்குளம், குளமங்கலம், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்@ர் மருந்துக்கடைகள் முதல் அறந்தாங்கி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன் மகன் நிர்மல் (7). அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் நிர்மலுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த சிறுவனுக்கு டெங்கு அறிகுறிகள் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்குள் புதுக்கோட்டை சார் ஆட்சியர் சரயு குளமங்கலம் கிராமத்தில் நிர்மல் வீடு மற்றும் சுற்றியுள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் நிர்மல் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. ஆய்வின் போது திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் அருள், சுகாதார ஆய்வாளர் வைத்திலிங்கம், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன், கிராம நிர்வாக அலுவலர் மூகாம்பிகை மற்றும் சுகாதாரக்குழுவினர் சென்றனர்.
ஆய்விற்கு பிறகு அந்த கிராமத்தில் 100 நாள் வேலை செய்யும் பொதுமக்களை அழைத்த சார் ஆட்சியர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்து அழிக்;கும் பணியில் சுகாதார குழுவினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் இதே போல அனைத்து கிராமத்திலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு துணையாக வருவாய்துறையினர் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள தனியார் மருந்துக்கடைகளில் காய்ச்சலுக்கு ஊசி போடப்படுவதாக வந்த புகாரையடுத்து கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் மருந்துக்கடை உரிமையாளர்களை அழைத்து... மருந்துக்கடைகளில் ஊசி போடக் கூடாது என்றும் டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டு இல்லாமல் யார் மருந்து வாங்கினாலும் அவர்களின் பெயர் விபரம், எதற்காக மருந்து வாங்கினார்கள் என்ற விபரங்களை மாலை 4 மணிக்குள் வருவாய் ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கொத்தமங்கலத்தில் உள்ள மருந்துக் கடைகளில் காய்ச்சலுக்கு ஊசி போடப்படுவதாக வந்த தகவலையடுத்து ஆய்வுக்குழுவினர் செய்த ஆய்வில் சில மருந்துக் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து நோட்டிஸ் கொடுத்துள்ளனர். மேலும் கொத்தமங்கலத்தில் சில மருந்துக்கடைகளை சீல் வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
- பகத்சிங்