காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காங்கிரஸ் சார்பாக திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, “இந்திய அரசியலில் இரண்டு பேர் தான் எந்த விதமான சொத்துமில்லாமல், பின்புலமுமில்லாமல் இந்தியாவின் அதிகார மையத்தை அடைந்தவர்கள். அவர்களில் ஒன்று மகாத்மா காந்தி. இன்னொருவர் காமராஜர்.
காமராஜர் இறக்கும்போது அவருக்கு சொந்த வீடு கிடையாது. அவரது பெயரில் வங்கியில் பணம் கிடையாது. அவருடைய பெயரிலோ, உறவினர்கள் பெயரிலோ எந்த சொத்தும் கிடையாது. ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிக்கு அதிக சொத்து இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர்.
சென்னையில் மட்டும் பல கோடி சொத்து உள்ளது. தன்னுடைய பெயரில் வாங்கவில்லை கட்சியின் பெயரில் வாங்கி வைத்தார். எங்களுடைய தலைமை அலுவலகம் இருக்கிற இடம். எங்களுடைய காமராஜர் அரங்கம் இருக்கிற இடம். சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நிலங்கள், அமைப்புகள், தமிழ்நாடு முழுவதும் கட்சி அலுவலகத்திற்கான கட்டிடங்கள் இவைகள் எல்லாம் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தனக்கு வாங்காமல், தன் குடும்பத்திற்கு வாங்காமல், தன் உறவினர்களுக்கு வாங்காமல் தன் கட்சிக்கு வாங்கினார். அது தான் உலகத்தில் சிறப்பான விசயம். நேற்று மோடி, இலவசமாக கொடுப்பதால் நாடு முன்னேறாது என்று சொல்லியிருக்கிறார். அது தவறு” என்று கூறினார்.