உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக இதுவரை ஐந்து கட்ட ஊரடங்கு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வந்துள்ளார். 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி 4 மணிக்கு நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார். அதில் கரோனா உள்ளிட்ட பல, பல பிரச்சனைகள் குறித்து அவர் தன்னுடைய கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமரின் உரை கற்பனையாகவும் இயல்பை மீறியதாகவும் உள்ளது. மக்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி கூறியது போல் எல்லோருடைய வங்கி கணக்கிலும் மாதம் 6,000 பணம் செலுத்தியிருந்தால் ஏழைகள் இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்" என்றார்.