மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து இன்று தேனியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பாக டிராக்டர் பேரணி நடைபெற இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்திற்காக கோடாங்கிபட்டியில் மேடை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த டிராக்டர் பேரணியில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமயில் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையே விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர்களை போராட்டத்திற்கு பயன்படுத்தும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல் 266 டிராக்டர் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போராட்டத்திற்கு அனுமதி தராத தேனி மாவட்ட காவல்துறையை கண்டித்து கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பழனிசெட்டிபட்டி சந்திப்பு வரை பேரணியாக சென்றனர்.
பேரணியாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பேரணி சென்றதற்காக கே.எஸ். அழகிரி உட்பட முக்கிய நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர். அழகிரி கைதானதை தொடர்ந்து கைது செய்த வாகனத்தை செல்லவிடாமல் கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சில தொண்டர்கள் அழகிரி கைதை கண்டித்து வாகனத்தின் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் கே.எஸ்.அழகரி உட்பட 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.