ராணுவத் தளவாடங்கள் ஏற்றிச்சென்ற வாகனத்தை பொதுமக்கள் மறித்ததால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து மூன்று ராணுவ போர் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவத்தினர் உதவி ஆய்வாளர் தலைமையில் ராணுவ வாகனம் சென்றுகொண்டு இருந்தது.
அப்போது குருபரப்பள்ளி அருகே அரசுப் பேருந்து ராணுவ வாகனத்தின் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ராணுவ அதிகாரிகள் பேருந்தை வழிமறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தை வைத்து ராணுவ வாகனத்தை வழிமறித்து பேருந்தில் இருந்த மக்கள் ராணுவ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் ராணுவத்தினர் பேருந்து ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மக்கள் ராணுவத்தினர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வாகனத்தை விடுவோம் எனக் கூற உதவி ஆய்வாளர் மன்னிப்பு கேட்ட பிறகு வாகனங்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.
இச்சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. ராணுவத்தினர் தாக்கியதில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.