கிருஷ்ணகிரி அருகே, மாமூல் தர மறுத்த தேநீர் கடைக்காரரை லட்டியால் தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அண்ணாசாலையில் தேநீர் கடை நடத்தி வருபவர் முகமது ஷபீர் (52). மாற்றுத்திறனாளி. கடந்த 4- ஆம் தேதி மாலை, தேநீர் கடைக்கு வந்த அஞ்செட்டி காவல் ஆய்வாளர் ரவிக்குமார், 'யாரை கேட்டு கடை நடத்தி வருகிறாய்?,' என லட்டியால் முகமது ஷபீரை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த முகமது ஷபீர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதாவிடம் புகார் மனு அளித்தார். அதில், ''அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மாமூல் வாங்கி வந்தார். கரோனா தொற்று அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் கடந்த மூன்று மாதங்களாக தேநீர் கடையை மூடி வைத்திருந்தேன். இந்நிலையில், அரசு விதிகளுக்கு உட்பட்டு கடந்த மூன்று நாள்களாக கடை திறந்து நடத்தி வந்தேன்.
இந்நிலையில், என்னிடம் மாமூல் கேட்ட ஆய்வாளர் ரவிக்குமார், காவல்நிலையத்திற்கு வந்து என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினார். ஆனால் என்னால் மாமூல் கொடுக்க முடியாததால் லட்டியால் தாக்கி கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய டிஎஸ்பி சங்கீதா, மாவட்ட எஸ்பி பண்டிகங்காதரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதையடுத்து, மாமூல் கேட்டு தேநீர் கடைக்காரரை தாக்கிய காவல் ஆய்வாளர் ரவிக்குமாரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.