கோயம்பேடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பதற்காகவே ஒவ்வொரு கிராமத்திலும் கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு குழு தலைவராக சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் இருப்பார். துணைத்தலைவராக வருவாய்த்துறை அலுவலர் இருப்பார். இவர்கள் மூலம் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகிறார். மேலும் நோய் தொற்று எண்ணிக்கை கடலூர் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது கண்டு பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.
பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சிகிச்சையின்போது சத்தான உணவுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. அதனால் அவர்கள் நோயிலிருந்து மீண்டு வருவார்கள் இதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்று அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து வருபவர்களை அந்தந்த கிராம மக்களே தடுத்து நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் அளித்து வருகிறார்கள். அதிலும் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கோயம்பேட்டிலிருந்து வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்திற்கு வந்தவர்கள் சுமார் 29 நபர்கள். இவர்கள் அனைவரும் ஊருக்குள் வந்து நுழையும்போதே ஊர் முகப்பில் மக்கள் திரண்டு வந்து அவர்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் தனிமைப்படுத்தி வைத்தனர். கோயம்பேடுவாசிகளிடம் ஊர்மக்கள் பேசும்போது, எங்களில் ஒருவர்தான் நீங்களும், உங்களை தனிமைப்படுத்துவது, அவமானப்படுத்துவது எங்களின் நோக்கம் அல்ல. உங்களுக்கே புரியும் கரோனா நோய் உங்களில் யாருக்காவது பரவியிருந்தால் அதன் மூலம் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் நோய் பரவும்.
அப்படி பரவாமல் இருப்பதற்குதான் உங்களை நாங்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம் . நீங்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று எடுத்துக்கூறி அவர்களை பள்ளிகள் வளாகத்தில் தனித்து தங்க வைத்த ஊர் மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் கொண்டுபோய் தங்க வைத்து அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோன்று வேப்பூர் அருகே உள்ள சில கிராமங்களில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களை வேப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அந்த நபகளில் ஒரு இளைஞர் பயந்துபோய் சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதைக்கண்டு திகைத்துப்போன பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அந்த இளைஞரை நீண்ட தூரம் துரத்திச் சென்று பிடித்து வந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். அங்கு உள்ளவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை கோயம்பேட்டிலிருந்து பல்வேறு தடைகளையும் கடந்து கிராமங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அப்படி நேற்று காலை 21 நபர்கள் லாரிகள் மூலம் ராமநத்தம் மேம்பாலம் அருகில் வந்து இறங்கினார்கள். அவர்களை கண்டதும் அங்கிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரணை செய்துள்ளார். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். உடனே அந்த இளைஞர் ராமநத்தம் காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளார்.
காவல்துறை வருவதை அறிந்ததும் அவர்கள் அனைவரும் தப்பி ஓட்டம் எடுத்தனர். அவர்களை துரத்திச் சென்ற காவல்துறையினர் திருமாந்துறை சுங்கச் சாவடி அருகில் அனைவரையும் மடக்கி அங்கே உட்கார வைத்து அவர்களை விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கோயம்பேட்டிலிருந்து வருவதாகும், அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி, நம்ம குணம், செந்துறை ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
உடனடியாக அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்த 21 நபர்களையும் தனி வாகனம் மூலம் அரியலூர் அழைத்துச்சென்று அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை இன்று நடைபெற்று வருகிறது. இதேபோல் திட்டக்குடி அருகே சிறுமலை கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னை கோயம்பேட்டிலிருந்து தனது ஊருக்கு வந்துள்ளார்.
இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது அவரை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் அந்த வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதற்கான நோட்டீஸை ஒட்டினார். இதைப்பார்த்த பாதிக்கப்பட்டவரின் மகன் முருகன் என்பவர், எங்கள் வீட்டில் எப்படி நோட்டீஸ் ஓட்டலாம் என்று கோபமடைந்து கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்டுவதற்கு ஓடி வந்துள்ளார். தப்பித்து ஓடி வந்த சிவக்குமார் திட்டக்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா, வட்டாட்சியர்கள் செந்தில்வேல் ரவிச்சந்திரன் ஆகியோர் அந்த ஊருக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் போலீஸ் சகிதம் வருவதை அறிந்து அந்த முருகன் தப்பி ஓடி விட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனை தேடி வருகின்றனர்.