குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளாமல் வேண்டும் என்றே பிரச்சனை செய்கின்றனர் எனவும், இந்த போராட்டங்களுக்கு போராட்டம் என பெயர் கொடுக்கலாமா என்றே யோசிக்க வேண்டும் என பாஜக நட்சத்திர பேச்சாளரான நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான கௌதமி, கோவை காளம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முன்னேற்றம் வேண்டும் என்றால் ஒற்றுமை தேவை அதற்கு மத்திய, மாநில அரசுகளும் ஒரே குரலில் பேசவேண்டும். ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்றார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கவுதமி, உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என நம்பிக்கை இருப்பதாவும், இதன் மூலம் நல்ல வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.
அன்றாட வாழ்வில், உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவே இந்த தேர்தல் என்றும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெறும் போராட்டங்களால் இந்த தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த ஆபத்தோ, பிரச்சனையோ இல்லை எனக் கூறிய அவர், இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளாமல் வேண்டும் என்றே பிரச்சனை செய்கின்றனர். இந்த தவறான புரிதலால் போராட்டங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த போராட்டங்களுக்கு போராட்டம் என பெயர் கொடுக்கலாமா என யோசிக்க வேண்டும் எனக் கூறினார்.
பல வளர்ச்சி நிலைகளை கணக்கில் கொண்டுதான் நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இது நியாமானது எனவும் அவர் தெரிவித்தார்.