கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன் சங்கர். இவர் தன்னிடம் முனைவர் பட்டம் படிக்கும் ஆய்வு மாணவர் ஒருவரை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவர், பேராசிரியர் மதன் சங்கர் மீது பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், ஐ.சி.சி கமிட்டிக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் கூறும்போது, "பேராசிரியர் மதன் சங்கரிடம் பி.ஹெச்டி பதிவு செய்த நாளிலிருந்தே, அவர் என்னை சாதி ரீதியாக துன்புறுத்தி வந்தார். ஆனால், என்னோட கவனம் படிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, அதையெல்லாம் சகித்துக்கொண்டேன். அதே சமயம், தனிமையில் இருக்கும் போது, அவர் என்னிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். மேலும், அவர் சொல்வதை கேட்கவில்லை என்றால், சான்றிதழில் கையெழுத்து போட மாட்டார். பேராசிரியர் மதன் சங்கர் என்னை போல் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தியுள்ளார். மதன் சங்கரின் தொல்லைகள் தாங்க முடியாமல், கடந்த 12 ஆம் தேதியன்று அவர் மீது புகார் அளித்தேன். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்" என பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்தியது. அதில், பாதிக்கப்பட்ட மாணவருக்கு கடந்த ஒன்றரை வருடமாக, பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பேராசிரியர் மதன் சங்கர் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகம், அவரை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவருக்கும், பேராசிரியர் மதன்சங்கர் இடையே நடைபெற்ற செல்போன் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அந்த மாணவரை சமரசப்படுத்தும் முயற்சியில் மதன்சங்கர் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது. தற்போது, இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.