நேற்று நிலவரப்படி சென்னையில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79,662 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகமான பாதிப்பு சென்னையில் கண்டறியப்படும் நிலையில், பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு, காய்கறி மற்றும் மளிகைச் சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து கூடுவதால் கரோனா பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, நெரிசல் மிக்க பகுதிகளில் இருக்கும் கோயம்பேடு போன்ற சந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதேபோல், சென்னை கொத்தவால்சாவடி சந்தை ஜூலை 13 -லிருந்து பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்றுமுன் தினம் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட சந்தையில் மக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். ஏற்கனவே சந்தை இருந்த கொத்தவால் சாவடி பகுதி அடைக்கப்பட்டதால், அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.