கடந்த ஏழு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும் டி23 புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று ஒருவரைக் கொன்றதால் புலியைச் சுட்டுக்கொல்ல நேற்று வனத்துறை உத்தரவிட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, முன்பு கொல்லப்பட்ட 3 பேரையும் அந்த புலி உணவாக உட்கொள்ளவில்லை. ஆனால் நான்காவது நபராக இன்று கொல்லப்பட்டவரைப் புலி உண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்று 8வது நாளாகப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புலி கண்காணிப்பு பணி பற்றி வனத்துறை அதிகாரி சச்சின் துக்காரா செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''இன்று காலையிலிருந்து தேடுதல் பணியைத் தொடங்கி இருக்கிறோம். டிராக் செய்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதனுடைய கால் தடங்களைப் பார்த்துவிட்டு அது எந்த வழியாக நகர்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று காலை ஒரு டீம் மசினகுடியில் அந்த புலியைப் பார்த்திருக்கிறார்கள். நேற்று சம்பவம் நடந்த இடத்திலேயே புலியை இன்று பார்த்துள்ளனர். எனவே இதற்கான திட்டங்களைத் தயார்செய்து வைத்திருக்கிறோம். ட்ரோன் கேமராவில் பார்த்தும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆபரேஷனை இன்று முடிக்க முடியவில்லை.
நாளைக்கு இதே ஆபரேஷனை தொடர்வோம். அது காட்டு விலங்கு என்பதால் வேறு இடத்திற்கு செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இமேஜ் ட்ராப் செய்யும் 48 கேமராக்கள் வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று ட்ரோன்கள் பயன்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று கும்கி யானையும் பயன்படுத்தி இருந்தோம். பக்கத்தில் இருக்கும் கிராம மக்கள் இந்த ஆபரேஷன் முடியும் வரை ஆடு, மாடு மேய்க்க வேண்டாம். வெளியில் வர வேண்டாம். தனியாக போக வேண்டாம். பகல் நேரத்தில் பரவாயில்லை இரவு நேரத்தில் தனியாக வெளியே போகக்கூடாது. பகல் நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இப்பொழுது அந்த புலி மசினகுடி ஏரியாவில்தான் இருக்கிறது. எனவே இங்கு இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நேற்று புலியைச் சுட்டுக் கொல்ல உத்தரவு வந்து விட்டது'' என்றார்.