நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நெல்லை மாவட்ட மக்களிடையே தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (17/02/2022) மாலை 05.00 மணிக்கு காணொளி மூலம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "நெல்லை மாவட்டத் தியாகிகள் பெயரைக் கேட்டாலே புத்துணர்ச்சித் தருகிறது. குடியரசுத் தின அணி வகுப்பில் தமிழக ஊர்தியை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. பிரதமரிடம் கோரிக்கை விடுத்தும் தமிழக அலங்கார ஊர்தி அணி வகுப்பில் இடம் பெறவில்லை. வ.உ.சி. யார்?, வேலுநாச்சியார் யார்? என தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை மத்திய அரசு யார் எனக் கேட்டது. சீப்பை ஒளித்து வைத்தால், திருமணம் நின்றுவிடும் என்ற ரீதியில் அணி வகுப்பு ஊர்தியைப் புறக்கணித்தனர். தமிழகம் முழுவதும் அணி வகுப்பு ஊர்திக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க. 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை தி.மு.க. 9 மாத கால ஆட்சியில் செய்துள்ளது. நெல்லையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைத்தவர் கலைஞர். திராவிட இயக்க வரலாற்றிலும் பொன் எழுத்தால் பொறிக்கப்பட்ட ஊர் நெல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடைபெற்றது. எந்த தகுதியோடு தி.மு.க. ஆட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார்? பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிவிட்டது யார்? ஹாலிவுட் திரில்லர் படங்களுக்கு இணையானது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம். கனகராஜ் மரணம், சயான் குடும்பம் மரணம் என ஐந்து பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆணையம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதே தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிதானே. தி.மு.க. ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என மக்களிடம் நேரடியாக எடப்பாடி பழனிசாமி கேட்டறியலாம். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டாக உள்ளது என சொல்வதற்கு ஒப்பானது எடப்பாடி பழனிசாமி பேச்சு.
நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கின்றனர். நாட்டுக்கே முன்னோடியாக தி.மு.க. அரசுதான் பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது. அறிவிக்கப்பட்டத் திட்டங்களை நாள்தோறும் ஆய்வு செய்கிறேன். கரோனா வார்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். சாலை அமைக்கும் பணிகளை நள்ளிரவிலும் ஆய்வு செய்தேன். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து இல்லங்களுக்கும் தி.மு.க.வின் திட்டங்கள் செல்கின்றன. தி.மு.க. சொல்கிற திட்டங்களை கட்டாயம் நிறைவேற்றும். தி.மு.க.வின் சாதனைகள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.