Skip to main content

10 கோடியில் மீன் விதைப்பண்ணை! கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு!!!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
ad

  

 கொடைக்கானல் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைக் தொடர்ந்து ரூ.10 கோடி மதிப்பில் கவுஞ்சிப் பகுதியில் நிறைவேற்றப்படவுள்ள மீன் பண்ணைத் திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகளும் ஆதரவு தர மறுத்து வருகின்றனர். 

 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட கவுஞ்சி கிராமத்தில் ரூ.10 கோடி செலவில் மீன் விதைப் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கவுஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே 4 ஏக்கர் புல்வெளியை சீரமைத்து அமைக்கப்படவுள்ள இப்பண்ணைக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோனலாறு மூலம் மன்னவனூர் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 2800 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கும்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் மீன் விதைப் பண்ணை அமைக்கப்பட்டால், தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இத்திட்டத்திற்கு கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, நிறைவேற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மேல்மலை கிராமமான கவுஞ்சி பகுதியை மீன்வளத் துறையினர் தேர்வு செய்துள்ளனர்.

 

vi

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு புல்வெளியை சீரமைத்து ஒப்பந்ததாரர் தரப்பில் பணிகள் தொடங்கின. இதற்கு கவுஞ்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கொடைக்கானல் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மேலும், மீன் பண்ணைக்கான தொழில் நுட்பயுத்திகள் சிறப்பு வாய்ந்தது என கூறிய அலுவலர்கள், அதனை 2 நாள்களில் விவசாயிகளுக்கு விளக்குவதாக உறுதி அளித்தனர். ஆனால் 6 நாள்களாகியும் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ. 10 கோடியில், ரூ.2 கோடி கூடுதலாக இருப்பதாகவும் அது தடுப்பணை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கே.பாலகிருஷ்ணன் (ஊர் மந்திரியார்) கூறியது: கடந்த சில நாள்களுக்கு முன்பு மன்னவனூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்ற ஆட்சியர் டி.ஜி.வினயிடம் மீன் விதைப் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அதற்கு ஆட்சியர் பொதுமக்கள் விரும்பாதபட்சத்தில் அத்திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் பண்ணை அமைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோனலாற்றிலிருந்து நேரடியாகவோ, ஆழ்துளை கிணறு மூலமாகவோ தண்ணீர் எடுக்கும்போது, விவசாயத்திற்கான நீராதாரம் மட்டுமின்றி குடிநீராதாரமும் பாதிக்கப்படும். கொகை;கானல் மக்கள் மீன் விதைப் பண்ணைத் திட்டத்தை புறக்கணித்த நிலையில், அதனை கவுஞ்சியில் நிறைவேற்றுவதை மீன் வளத்துறையினர் கைவிட வேண்டும் என்றார்.

 

இது தொடர்பாக மீன் வளத்துறை உதவி இயக்குநர் வேல்முரகன் கூறியது இந்த பண்ணையில் சாதார கெண்டை மீன் (காமன் க்ராப்) குஞ்சுகளை மட்டும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு முறை எடுக்கப்படும் தண்ணீரை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 3 நாள்களில் மீன் குஞ்சுகளை எடுத்து விற்பனைக்கு அனுப்பி விடுவோம். இதன் மூல்ம உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.


மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் கவுஞ்சியைச் சேர்ந்த விவசாயிகளும், மீன் வளத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். அதேபோல் மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம், பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மாணிக்கம் எம்.எல்.ஏ பேச்சுவார்த்தையை உடனடியாக முடித்து, மீன் விதைப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்திற்கான மொத்த தொகையில் ரூ.2 கோடி மீதம் வருவதால் அதன்மூலம் கோனலாற்றில் 2 தடுப்பணைகள் கட்டுவதாகவும் தெரிவித்தார். இதனை கவுஞ்சி கிராமத்தினர் ஏற்க மறுத்தனர். அப்போது பேசிய எம்.எல்.ஏ. செந்தில்குமார்... இந்த கூட்டத்திற்கு 10 விவசாயிகள் மட்டுமே வந்துள்ளனர். அதனால் கவுஞ்சி, மன்னவனூர், பூண்டி பகுதிகளைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து முறையாக கூட்டம் நடத்தி கருத்துக் கேட்க வேண்டும்என்றார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது!

 

சார்ந்த செய்திகள்