தமிழகத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் வங்கிக் கணக்கிலிருந்து 26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இதுவரை 4,300 பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் கிசான் திட்டத்தில் மதுரையில் 71.60 லட்சம் ரூபாய் 11,535 தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் முறைகேடாக பெற்ற 37.38 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 936 பேர் வங்கிக் கணக்கில் இருந்து இந்தப் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் மூன்று ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முத்துப்பேட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர், நன்னிலம்- கொரடாச்சேரி உதவி மேலாளர்கள் இருவர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற 2,383 பேரிடம் இருந்து இதுவரை 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கிசான் திட்டம் முறைகேடு விவகாரத்தில் இன்னும் 69 லட்சம் பறிமுதல் செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.