'சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது" என்று கிரண்பேடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று (24.07.2020) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை நிகழ்த்த காலை சட்டசபைக்கு வந்தார். அவருக்கு புதுச்சேரி சட்டசபையில் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்பு சபாநாயகர் சிவக்கொழுந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்பு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 9.30 மணி அளவில், சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்.
அவரது உரையில், "இந்தியாவில் சிறந்த யூனியன் பிரதேசமாகவும், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சிறந்த மாநிலமாகவும் புதுச்சேரியை மத்திய அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவையைப் பாராட்டுகின்றேன். கரோனா தடுப்பு பணியில் புதுச்சேரி அரசு சிறப்பாகச் செயல்படுகின்றது.
சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பணி சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிதியை அரசு சரியான முறையில் செலவிட்டுள்ளது. அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எனது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு" என்றவர் தனது உரைக்கு ஒத்துழைப்பு அளித்த சபாநாயகர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துப் புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் உரை முடிந்தவுடன் எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.