கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பகுதியில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சமூதாய கூடம் கட்டப்பட்டது. இதில், ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த வாடகையில் திருணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாகச் சமூதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்காமல் சிமெண்ட் மூட்டைகள், கம்பிகள் அடுக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.
சமூதாய கூடம் இல்லாமல் ஏழைமக்கள் மிகவும் சிரமம் அடைந்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாடகையை கடன் வாங்கி கொடுத்து அப்பகுதி மக்கள் வீட்டு சடங்குகளைச் செய்து வருகிறார்கள். இதுகுறித்து கடந்த 5 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டு போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் கடந்த காலங்களில் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லையா தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், சிவராமன், செம்மலர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மேளதாள முழங்கச் சீர்வரிசை பொருட்களுடன் சம்பந்தம் கலக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சீர்வரிசை பொருட்களுடன் வந்து அலுவலகத்தின் வாயில் தரையில் சீர்வரிசை பொருட்களை வைத்துக்கொண்டு சமூதாய கூடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோசங்களை எழுப்பினார்கள். இதனால் அலுவலக வாயிலில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ரூ12 லட்சத்திற்கு சமூதாய கூடத்தைச் சீர் செய்வதற்கு திட்டமதிப்பீடு அனுப்பபட்டுளளதாகவும் இதற்கான நிதி அனுமதி கிடைத்தவுடன் சீர் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். ஒன்றிய அலுவலகத்தில் மேளம் அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.