புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் 900 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் (சிவன்) கோவில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள சிவனிடம் நக்கீரன் மதுரையில் நடந்த தர்க்கம் பற்றிய கேள்விகளுக்கு விடை பெற்றுச் சென்ற இடமாக கருதப்படுகிறது. அதனால் இங்கு உண்மையின் பக்கம் நின்ற மெய்நின்றநாதருக்கு 2016 ம் ஆண்டு (சிவனுக்கு) 81 அடி உயரத்தில் தென்னிந்தியாவில் உயரமான பிரமாண்ட சிலையும் எதிரில் சிவனிடம் தர்க்கம் செய்த தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் இந்த கோயிலில்தான் நடந்து வருகிறது. சிலைகள் அமைக்கப்பட்ட பிறகு பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளில் பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சுற்றுலா பயணிகளும் அடிக்கடி வந்து செல்லும் தளமாக மாறி உள்ளது.
இந்த நிலையில் சிவராத்திரி நாளில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இன்று மாலையில் இருந்தே வரத் தொடங்கினார்கள். மேலும் ஆலய தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவில் தங்கி இருந்து வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள். மேலும் பிரமாண்ட சிவன் அமைந்துள்ள தடாகத்தை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து இரவில் சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னதானம், கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும், கிராமிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை பிரதோஷகுழுவினர், விழாக்குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.