வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் கவிக்கோ நினைவேந்தல் பெருஞ்சிறப்போடு நடைபெற்றது.
திமுக, மதிமுக, எஸ்டிபிஐ, முஸ்லீம் லீக், அதிமுக, மமக, மஜக, நாம்தமிழர் என அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி கவிக்கோ நினைவேந்தலை ஒருங்கிணைத்தனர்.
நினைவேந்தலுக்காக கவிக்கோவோடு நட்பு பாராட்டிய, நெருங்கி பழகிய அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கவிக்கோ குறித்த தங்கள் பார்வையை பதிவு செய்யும் மலர் ஒன்றையும் கூட்டமைப்பு வெளியிட்டது.
அந்த மலரில் கவிக்கோ குறித்து பேராசிரியர். க.அன்பழகன், வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், தமீமுன் அன்சாரி, சுப.வீரபாண்டியன், காதர் மைதீன், எம்.எச்.ஜவாஹிருல்லா, தெஹ்லான் பாகவி உள்ளிட்ட தலைவர்களும், வைரமுத்து, யுகபாரதி, மு.மேத்தா உள்ளிட்ட கவிஞர்களும் ஹாஜாகனி, கோவி.லெனின் போன்ற ஊடகவியலாளர்களும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு புகழுரை நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு அரங்கமே நிரம்பி நிற்க இடமில்லாமல் நின்று கொண்டே பலர் நினைவேந்தல் உரைக்கு செவிமடுத்தனர்.
ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் இந்த முயற்சியை பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.