கதிராமங்கலத்தில் கைதானவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை!

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கதிராமங்கலத்தில் கடந்த ஜீன் மாதம் 30ம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நிறுவனத்தால் கிராமத்தின் நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றம்சாட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது தடியடி அதனை தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் இவர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்கள் 10 பேருக்கும் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு வழக்கிலும் மதுரை கிளை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. ஜாமீன் உத்தரவில் பேராசிரியர் ஜெயராமன் மதுரை நீதிமன்றம் ஜேஎம் 1 எண்ணில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், ரமேஷ் என்ற ஒருவர் மட்டும் பாபநாசம் காவல் நிலையத்தில் கையெழுத்து இடவும், மேலும் 8 பேர் திருச்சி நீதிமன்றம் ஜேஎம்1ல் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு இன்று திருச்சி மத்திய சிறை நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு அடைக்கப்பட்டிருந்த, பேராசிரியர் ஜெயராமன், செந்தில்குமார், முருகன், சந்தோஷ், சிலம்பரசன், விடுதலைசுடர், சாமிராமன், வெங்கட்ராமன், தர்மராஜன், ரமேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரையும் கதிராமங்கலம் கிராமத்தினர் வரவேற்று அழைத்து சென்றனர்.
பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை சீர்குலைத்து பொய் வழக்கு பதிந்து கைது செய்து, 43 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம்.
இந்த பிரச்சினையில் நிலத்தடி நீரை மாசுபடுத்திய ஓஎன்ஜிசி, அமைதியான வழியில் நடைபெற்ற போராட்டத்தை சீர்குலைத்த காவல்துறை, போராடிய மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணாத தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆகியோர்தான் முக்கிய குற்றவாளிகள். மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தமிழக அரசு ஓஎன்ஜிசிக்கு பாதுகாப்பாக நடந்து கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஜெ.டி.ஆர்.