கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, "தமிழகத்தில் அதிசயம், அற்புதம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி நினைத்திருக்க கூட மாட்டார், தான் முதல்வராக ஆவேன் என்று, ஆனால் ஒரு அதிசயம் நடந்தது. அவரது ஆட்சி நான்கைந்து மாதங்கள்கூட தாங்காது என்றார்கள். ஆனால், இன்றுவரை ஆட்சி சிறப்பாக நீடிக்கிறது. இதுபோன்ற அதிசயம் நாளையும் நிகழும்" என்று கூறி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு,"தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது" என்று அவர் கூறியது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படி அவ்வப்போது தீப்பொறியான கருத்துக்களை அரசியல் களத்தில் தூவி வரும் ரஜினி, டிசம்பர் 31,2017 அன்று அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். ஆனால் அதை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும் இன்றுவரை அவர் அரசியல் பக்கம் தலைகாட்டவில்லை. அவரின் சக நடிகரான கமல் கட்சி ஆரம்பித்து, தேர்தலிலும் களம் கண்டுவிட்டார். இவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இதற்கிடையில் கமல்-ரஜினி இருவரும் இணைந்து செயல்படப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு ஏற்றபடியே 'நாங்கள் இணைவது முக்கியமல்ல; மக்களின் வளர்ச்சிதான் முக்கியம்' போன்ற கருத்துக்களையும், 'சூழ்நிலை ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம்' போன்ற கருத்துக்களையும் இருவரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தனது டிவிட்டர் பக்கத்தில் "கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால் அது அபூர்வ ராகமா, ஆடு புலி ஆட்டமா ? நினைத்தாலே இனிக்கும் ! #அதிசயம்" என்று பதிவிட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.