தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயவாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆகியோர் கருணாஸ் கைது குறித்து வெளியிடும் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ அவர்கள் , தன் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சைக்குரிய தாகி, அவரை கைதில் கொண்டு போய் நிறுத்தியிருக்கறது.
அவரது பேச்சின் சில பகுதிகள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை. அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். வேதனையடைந்தோம்.
நாங்கள் கருணாஸ் அவர்களை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, அவரது வார்த்தை பிரயோகங்களையும், அதனால் உருவாகியுள்ள சர்ச்சைகளையும் எடுத்துக் கூறி இது நியாயம் தானா? உங்கள் கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி பேசிவிட்டு வந்திருக்கலாமே? அது தானே அரசியல் தர்மம் ? என்றெல்லாம் சுட்டிக்காட்டி, இதற்கு வருத்தம் தெரிவிக்க சொன்னோம்.
அவர் அதை புரிந்து ஏற்றுக் கொண்டார். இரண்டு முறை வருத்தங்களையும் ஊடகங்களின் வழியாக தெரிவித்துக் கொண்டார் இன்று அவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் காவல்துறை கைது செய்துள்ளது.இதை நாங்கள் ஒரு சட்ட நடவடிக்கையாக பார்க்கிறோம். புரிந்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கம், பொது அமைதி ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். யாரும், யாரையும் காயப்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
அதே சமயம் தமிழக மக்களின் பெரும் மதிப்பை பெற்ற தந்தை பெரியாரின் சிலையை உடைப்போம் என்று கூறியவரும், சமீபத்தில் நீதிமன்றத்தையும் , காவல்துறையையும் கொச்சைப்படுத்தி, கேவலமாக பேசிய H. ராஜா அவர்கள் மீதும், பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி படு அசிங்கமாக கருத்து பதிவிட்ட S.V.சேகர் மீதும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்திருந்திருக்க வேண்டும்.
நேற்று கூட அண்ணன் சரத்குமார் போன்றவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டுமென்று தானே பேட்டியளித்தார்கள்.இதே கேள்வியை தமிழகத்தில் பலரும் கேட்கிறார்கள். எனவே அவ்விருவர் மீதும் இப்போதாவது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு சமூக நல்லிணக்கத்தை காக்கவும்,அமைதியை நிலைநாட்டவும் பாராபட்சமின்றி செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தமிழக மக்கள் அனைவரும் பொது நல்லிணக்கமும், அமைதியும் வலிமைப் பெற ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.