குடியிருப்புப் பகுதிகளில் கரும்பன்றிகள் வளர்க்கத் தடை! - சென்னை உயர்நீதிமன்றம்
மூளைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கான கிருமிகளை பரப்பும் உயிரினமாக பன்றிகள் இருப்பதால் உரிமம் பெறாமல் வளர்க்கப்படும் பன்றிகளை குடியிருப்பு பகுதியிலிருந்து அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மழை பொய்த்ததால் விவசாயத்தை கைவிட்டு, காய்கறி பயிரிடுதலில் மக்கள் ஈடுபட்டுள்ள நிலையிலும், உழவர் சந்தையில் விற்பனை செய்தும் லாபமீட்ட முடியவில்லை என கோவையைச் சேர்ந்த ஆல சுப்ரமணியம் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது நிலத்திற்கு மேற்கு பகுதியில், உரிமம் பெறாமல் பன்னாரி, கருப்புசாமி, முருகன் ஆகியோர் வளர்த்துவரும் 500க்கும் மேற்பட்ட கரும்பன்றிகளை வளர்த்து வருவதாகவும், இவை தோட்டத்துக்குள் புகுந்து காய்கறிகளை நாசம் செய்துவிடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பன்றிகளை வெளியேற்ற அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர்,
ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர், சுல்தான்பேட் ஊராட்சி ஒன்றிய வட்ட வளர்ச்சி அலுவலர்,
செலக்கரிச்சல் கிராம பஞ்சாயத்து தனி அலுவலர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளார்.
பயிர்களை சேதப்படுப்படுத்துவது மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்துவதுடன், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு நோய்களையும் பரப்புவதாக மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பகுதியில் உள்ள கிராமத்தினர் தொடர்ந்து அரசிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மூலம் பன்றிகளை வளர்க்கும் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த நோட்டீஸின் படி கரும்பன்றிகளை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு, கிராமப்பகுதியை விட்டு வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால் காவல்துறை மீது நடவடுக்கை எடுக்கப்படும் என எச்சரித்தபோது, பன்றிகளும் அகற்றபடவில்லை, காவல்துறை மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் மனுவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இறைச்சிக்காக அந்த பன்றிகள் திறந்தவெளியில் வெட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தபோது, அரசு அளித்த பதிலில் கரும்பன்றிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உரிமம் இல்லாமல் பன்றி வளர்ப்பது குறித்து மூவர் தரப்பில் விளக்கம் கேட்டும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி உரிமம் பெறாமல் இயங்கும் பன்றி வளர்ப்பு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மூளைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கான கிருமிகளை பரப்பும் உயிரினமாக பன்றிகள் இருப்பதால், கிராமப்பகுதிக்கு அருகில் வளர்க்கப்பட்டு வரும் 500 கரும்பன்றிகளை ஒரு வாரத்தில் அகற்றிவிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- சி.ஜீவா பாரதி