விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 61) தனது குடும்ப தேவைக்காக நேற்று திருவெண்ணைநல்லூரில் உள்ள வங்கிக்குச் சென்று தங்கள் குடும்பத்தினரின் எட்டு சவரன் தங்க நகையை வங்கியில் அடமானம் வைத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி பையில் வைத்துக் கொண்டு வங்கியை விட்டு வெளியே வந்த அப்துல் ரஹீம் வங்கிக்கு முன்பு நிறுத்தி இருந்த தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையைத் திறந்து அதற்குள் பணத்தை வைத்து வண்டியில் ஏறி புறப்பட நினைத்தபோது தனது வங்கி கணக்கு புத்தகம் வங்கிக்கு உள்ளேயே மறந்து வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. உடனே இருசக்கர வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு வங்கியில் உள்ள சென்று தனது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டார்.
வீட்டுக்கு சென்ற பிறகு வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்த பணத்தை எடுக்க வண்டியில் உள்ள பெட்டியை திறந்த போது அதிர்ச்சி அடைந்தார். பணம் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த அப்துல் ரஹீம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அவர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த வங்கிக்கு சென்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை சில நொடிகளில் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். வங்கி வாசலில் நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து சில நொடிகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.