குமரி மாவட்டத்தின் ஒரு பகுதி அடர்ந்த வனப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டது. இங்கு 47 மலைக் கிராமங்களில் காணியின மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பல கிராமங்களில் பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களோடு கடந்த 2006-ல் திமுக ஆட்சியில் மின்சாரம் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கும் பல கிராமங்களில் சாலை வசதிகளே இல்லாமல் இருக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், கடையல் ஊராட்சிக்குட்பட்ட புறத்திமலை மலை கிராமத்தில் ராமன் (55) என்பவர் குடும்ப பிரச்சனையால் 6-ம் தேதி விஷம் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த ஆம்புலன்ஸ் மலை கிராமத்தின் கீழ் பகுதி வரை வந்துள்ளது. அதற்குமேல் ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் வண்டி அங்கேயே நின்றுள்ளது.
இதனால், ராமனை அந்த மக்கள் தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு 3 கி.மீ தூரம் வரை நடந்து வந்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மலைக் கிராமத்திற்கு பாதை இல்லாததே இந்த மரணத்திற்கு காரணம் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு. அவரது உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் மலைக் கிராமத்தின் கீழ் வரை வாகனத்தில் சொல்லப்பட்ட சடலத்தை மீண்டும் அவரின் உறவினர்கள் தொட்டில் கட்டி மேலே தூக்கிச் சென்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மலை வாழ் மக்கள் சங்க மா.செ. ரகு, “இங்குள்ள பல கிராமங்களில் பாதைகளே இல்லை. ராமனுக்கு நடந்தது போல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் வந்தால் கூட மருத்துவமனைக்கு போக முடியவில்லை. மக்கள் மரம் செடிகளை வெட்டி தான் பாதை அமைத்து நடந்து வருகின்றனர்.
வட்டப்பாறை மலை, புறத்திமலையில் 3 கி.மீ தூரத்துக்கு மக்களே பாதை அமைத்தனர். அந்த பாதைகளிலும் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமானது. அந்தப் பாதையை ஜல்லி போட்டு சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் இங்குள்ள 7 துணை கிராமங்களுக்கு செல்லும் பாதைகளை 2013-ல் ரூ.1.5 கோடி செலவில் ஏற்படுத்தினார்கள். அந்த பாதைகள் ஒரே ஆண்டில் மோசமான நிலைக்கு வந்தது. அதையும் இதுவரைக்கும் பராமரிக்கவில்லை. இந்த ஊராட்சியில் மட்டும் 19 மலைக் கிராம பாதைகள் மோசமாக உள்ளன” என்றார்.