களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்ற வழக்கில் திருவிதாங்கோடு சோ்ந்த அப்துல் சமீம் மற்றும் கோட்டார் இளங்கடையை சோ்ந்த தவ்பீக் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். இரண்டு பேரும் கொலை செய்வதற்கு முன்பும் கொலை செய்த பிறகும் அவா்கள் சென்ற இடங்கள் மற்றும் அவா்களுடன் தொடா்புடையவா்கள் குறித்தும் போலீசார் அவா்களை நேரில் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனா்.
இதில் அவா்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை திருவனந்தபுரம் தம்பானூா் பஸ்நிலையம் அருகில் இருந்தும் துப்பாக்கியை எா்ணாகுளம் பஸ்நிலையம் பின்பக்கம் உள்ள கழிவு நீா் ஓடையில் இருந்தும் போலீசார் அவா்களை நேரில் அழைத்து சென்று கைப்பற்றினார்கள்.
இந்தநிலையில் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் இருவரையும் நேற்று (28-ம் தேதி) போலீசார் அவா்களின் வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனா். இதில் அப்துல் சமீம் வீட்டுக்கு போகும் போது வீட்டின் உள் கதவு பூட்டப்பட்ட நிலையில் அழைப்பு மணியை பெண் போலீசார் அழைத்ததும் அப்துல் சமீமுன் தாயார் வந்து கதவை திறந்தார். அவா் மட்டும் வீட்டுக்குள் இருந்தார்.
மகனை பார்த்ததும் கதறி அழுதார். வீட்டில் சமைத்து பல நாட்கள் ஆகி விட்டது. உனக்கு தருவதற்கு வீட்டில் எதுவுமே இல்லையே என கலங்கிய அவர், அப்துல் சமீமிடம் எதற்கு மக்களே சொந்த பந்தங்கள எல்லாம் காட்டி கொடுத்தாய் அங்கு சென்று போலீசார் அவா்களை தொந்தரவு செய்கிறார்கள். அதற்கு அப்துல் சமீம், நான் யாரையும் சொல்லவும் இல்ல, யார் வீட்டுக்கு போனதும் இல்ல, எல்லாம் இடத்துக்கும் போலீசார் தான் என்னை அழைத்து செல்கிறார்கள் என்றார்.
அதன்பிறகு போலீசார் அப்துல் சமீமை தயாருடன் பேச வைக்கவில்லை. பின்னா் இரண்டு மணி நேரம் வீட்டில் சோதனை செய்த போலீசார் ஆதார் கார்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுனா் உரிமம், பள்ளி சான்றிதழ் மற்றும் இஸ்லாம் குறித்து அவன் படித்த 5 புத்தகங்களை போலீசார் எடுத்தனா். இதற்கிடையில் ஒரு மணி நேரம் கழித்து தான் அப்துல் சமீமின் தந்தை வந்தார். அவா் அப்துல் சமீமை பார்த்து கண் கலங்கினார். ஆனால் அவனிடம் எதுவும் பேசவில்லை.