பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் சூசை பாண்டிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,''நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டங்களில் பங்கெடுத்து லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நான் வழங்கிக் கொண்டு வருகிறேன். 2024 ஆம் ஆண்டின் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து தொடங்குவதில் நான் மகிழ்ந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் இது என்னுடைய அருமை தங்கை கனிமொழி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மாவட்டம்.
நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பவர் அவர். அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்காகவும் குரல் கொடுப்பவர் அவர். தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு என தெரிந்ததும் உடனே இங்கே ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியதை பார்த்தோம். தங்கை கனிமொழி மாதிரியே தூத்துக்குடி மாவட்டத்தின் பெண் சிங்கமாக விளங்கும் கீதா ஜீவன் அவர்களும், அமைச்சராகவும் செயல்வீரராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனும் மக்களுடன் மக்களாக இருந்து மக்களை காப்பாற்றினார்கள்.
ரூபாய் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் 288 நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்தோம். 145.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடைப்புகளை நிரந்தரமாக சரி செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழிற்சாலையில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார கார் தொழிற்சாலை அமைகின்றது. கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல் வெள்ளமாக இருந்தாலும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக திட்டங்கள் தீட்டுவது திமுக அரசு தான்'' என்றார்.