தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 62 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இது வரையிலும் 11 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை, அமமுக வேட்பாளர் ம.புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டிபிஎஸ் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டண்டைன் ராஜசேகர், தமிழ்ப்பேரரசு கட்சியின் வேட்பாளர் வ.கவுதமன் உள்ளிட்ட 48 பேர் 62 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கடந்த 27.3.2019 அன்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாமலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் சரியான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி கெடு விதித்திருந்தபோதும், தாக்கல் செய்யாததால் சுயேட்சை வேட்பாளர் தினகரன் மனுவும் நிராகரிக்கப்பட்டன.
‘திமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் மனுக்கள் மீது ஆட்சேபம் தெரிவித்தும் அவர்களது மனுவை தேர்தல் அலுவலர் நிராகரிக்கவில்லை. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறாது என்று நினைக்கிறேன். ஆகவே, என் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்’’என்று வ.கவுதமன் தனது வேட்புமனுவை நேற்றைய தினமே வாபஸ் பெற்றார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 62 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப் பட்டிருந்த நிலையில் இது வரையிலும் 11 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.