உலகநாடுகளைக் கலங்கடித்த கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக இன்று உயர்ந்துள்ளது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். அதன் படி குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மாவட்ட உதவி எண்களை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.