நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.
நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.
இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.