Skip to main content

மூன்று பெண்களைக் கழுத்தறுத்து கொலை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை!

Published on 25/10/2017 | Edited on 25/10/2017
மூன்று பெண்களைக் கழுத்தறுத்து கொலை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை!

மூன்று பெண்களை கழுத்தறுத்து கொலைசெய்த வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே கடந்த 2011 அக்டோபர் மாதம் 13ம் தேதி தோப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சிந்து, அவரது தாய் சத்தியவதி, பாட்டி விசாலாட்சி ஆகியோரைக் கழுத்தை அறுத்து கொலைசெய்த 3 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த 28 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சென்னையைச் சேர்ந்த சந்தானம், வேலூரைச் சேர்ந்த காமராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த இளங்கோ ஆகியோரை கைது செய்தனர். 

இவர்கள் மீதான வழக்கை நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட சந்தானம் இறந்துவிட்டார். 
இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்றம், காமராஜ், இளங்கோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. 

இந்த தண்டனையை எதிர்த்து காமராஜ் மற்றும் இளங்கோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அடங்கிய சிறப்பு அமர்வு, கொலையாளிகள் இருவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். இந்த தண்டனையை 30 ஆண்டுகள் வரை அனுபவிக்க வேண்டும் எனவும், அதுவரை இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்யக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தண்டனை பெற்ற காமராஜுக்கு இரண்டு குழந்தையும், இளங்கோவனுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த மூன்று  குழந்தைகளுக்கும் வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு  கல்வி வழங்க வேண்டும். மேலும், பள்ளியில் சேர்க்கும்போது குழந்தைகளின் தந்தை என்ன வேலை செய்கிறார் என்பதை கேட்கக்கூடாது என தீர்ப்பளித்தனர்.

- சி.ஜீவாபாரதி

சார்ந்த செய்திகள்